admk candidate madusoodanan
அதிமுக சார்பில் கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் – ஓபிஎஸ் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த மறுநாளே சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
இரட்டை இலை சின்னத்தை ஒற்றுமையாக இருந்து பெற்ற இபிஎஸ் –ஓபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் அக்கட்சி திணறி வந்தது.

வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் அன்று முடிவெடுக்க முடியாமல் கூட்டம் முடிவுற்றது. அதே நேரத்தில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட 20 பேர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்..

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? மதுசூதனனா ? பால கங்காவா? கோகுல இந்திராவா ? என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் மிகுந்த எதிர்பர்ர்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இது போன்ற சமயங்களில் ஜெயலலிதா இருந்திருந்தால் அனைத்துக் கட்சிகளையும் முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்துவிடுவார் என தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதையடுத்து திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன் அணி, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளதால் இனி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
