admk candidate for r.k.nagar election will be announce on 27th nove
அ.தி.மு.க., ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் 27-ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெற உள்ளதாகவும் அப்போது ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் தங்களுக்குத்தான் என இபிஎஸ் –ஓபிஎஸ் அணிக்கும், அதிமுக அம்மா அணிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என தீர்ப்பு வந்தது. இதனையடுத்து வரும் 21 ஆம்தேதி ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் களமிறங்குகிறார். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் தினகரனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை வேட்பாளரை நிறுத்திய தேமுதிக இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் , இதில் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாள்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் நடைபெறவுள்ள . ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ,நிர்வாகிகள் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என தெரிவித்தார்.
