அதிமுக அம்மா அணியில் 60 பேருக்கு, கட்சியில் புதிய பதவி வழங்கி துணை பொதுச் செயலாளர் டி.டி.தினகரன் பெயர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல் மற்றும் எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணி (ஆம்பூர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளராகவும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக பாலசுப்பிரமணி எம்எல்ஏவும், மகளிரணி இணை செயலாளராக ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும், வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தினகரனின் ஆதரவாளர்கள். இவர்களை தவிர, வேலூர் மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த ஒருவருடைய பெயர் கூட, தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது, வேலூர் மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் சிலர், குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏ பேனரை கிழித்துள்ளனர். பேனரில் மகளிர் அணி இணை செயலாளராக புதிய பதவி வழங்கியதற்கு சசிகலா மற்றும் தினகரனுக்கு எம்எல்ஏ தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேனரில் சசிகலா, தினகரன் மற்றும் ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏ படம் இடம் பெற்றிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த சிலர், பேனர் மீது கல்வீசி தாக்கியதை சிலர் பார்த்துள்ளனர். கல்வீசியதில் பேனரில் இருந்த சசிகலா படம் கிழிந்தது. இதையடுத்து, பேனரை கிழித்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

பெண் எம்.எல்.ஏ. பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம், குடியாத்தத்தில் தினகரன் ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.