அதிமுக மற்றும் பாஜகவின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகம் முழுவதும ஒரே சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா ? என உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு மிகுந்த சிரமத்துக்கிடையே அமமுகவுக்கு பரிசுப் பெட்டிசின்னம் கிடைத்தது.

ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத் தேர்தல்களில் அமமுக பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் அரவக்குறிச்சி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக மற்றும் அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது  திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று அதிமுகவும், அமமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள்.

அதே நேரத்தில் அதிமுக – அமமுகக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அமமுகவுக்கு கிடைத்த பரிசுப் பெட்டி  சின்னத்தை அக்கட்சியினர் மிகக் குறுகிய நாட்களிலேயே பிரபலப் படுத்திவிட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலான வீட்டுச் சுவர்களில் பரிசுப் பெட்டிச் சின்னம் வரையப்பட்டு எங்கு பார்த்தாலும் ஜொலிக்கிறது.மேலும் பேனர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக அதை அமமுகவினர் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினர்.

பரிசுப் பெட்டி சின்னத்தால் அதிமுகவுக்கு வரும் வாக்குகள் அமமுகவுக்குச் சென்றுவிடும்  என்பதால், இந்த சின்னத்தைப் பிரபலப்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அதிமுகவினர் மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இடைத் தேர்தல் களத்தில் அமமுக சின்னம் வரையப்பட்டிருக்கும் இடங்களில் அதை அழிப்பதற்காக பேரம் பேசிவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட  ஓர் இடத்தில் உள்ள வீடுகளில், உரிமையாளர்களின் அனுமதியோடு பரிசுப் பெட்டி  சின்னத்தை வரைந்துள்ளார் அக்கட்சியினர்  வரைந்துள்ளனர்.

இதனப் பார்த்த  அதிமுக தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் செங்கோட்டையன், அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னத்தை அழித்துவிட்டு இரட்டை இலை சின்னத்தை வரையந்தால் ஒலு வட்சம் ரூபாய் தருவதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அதை அழிக்க யாரும் முன்வரவில்லை என்ற கூறப்படுகிறது. இது குறித்து கருத்து சொன்ன அதிமுக நிர்வாகி ஒருவர் , இந்த தொகுதியில் திமுகவினரைக் கூட சமாளித்து விடலாம் ஆனால் அமமுகவினரை சமாளிக்க முடியவில்லை என புலம்பி இருக்கிறார்.