நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி நாளை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள போராட்டத்தில் அதிமுக அம்மா அணியும் கலந்து கொள்ளும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி, ஓபிஎஸ் இணைப்பிற்குப் பிறகு , அந்த அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

எடப்பாடி அரசை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என தினகரன் தரப்பு தீவிர முயற்சியில் உள்ளது. இதற்காக 19 ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர திவாகரன், கட்சிக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஆட்சிக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ம் பதவியில் நீடிக்கக் கூடாது என தெரிவித்த திவாகரன், சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டால், பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறினார்.

நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக மக்களின் நலனுக்காக எந்த கட்சி போராடினாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில், நீட் தேர்வுக்கு எதிராக நாளை சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் எனவும் திவாகரன் தெரிவித்தார்.