நாட்டில் எந்த பரபரப்பு என்றாலும் பொதுவாக நகர பகுதிகளில்தான் அமளிதுமளி நடக்கும்.  அதிலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எல்லா மாவட்ட தலைநகரங்களுமே வளர்ந்த நிலை நகரங்கள் மற்றும் மாடர்ன் சிட்டிகள் என்பதால் அமளிக்கு குறைவே இருக்காது. ஆனால் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலோ முதலில் ஊரக பகுதிகளில்தான் நடக்கிறது. எனவே கிராமங்களில்தான் அரசியல் அமர்க்களப்பட்டுக் கொண்டும், அல்லு தெறித்துக் கொண்டும் இருக்கிறது. உள்ளாட்சி பதவிகளை கையில் வைத்திருந்தால், எதிர்வரும் சட்டசபை தேர்தல் சமயத்தில் பிரசாரம் முதற்கொண்டு அத்தனை விஷயங்களுக்கும் பல வகைகளில் வாய்ப்பாக இருக்குமென்பதால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு கட்சிகளுமே இந்த  தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் வெறித்தனம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த சூழலில், கிராமப்புற ரேஷன் கடைகளை ஆளுங்கட்சியினர் முற்றுகையிட்டு வருவதாக ஒரு புகார் வெடித்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க இருக்கும் கிராமப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை வளைக்கும் அ.தி.மு.க.வினர், தங்களிடம் ‘உங்க கடையில் மொத்தம் எத்தனை கார்டுகள்? அதில் அரிசி கார்டுகள் எவ்வளவு? எப்ப பணமும், பரிசு தொகுப்பும் கொடுக்கப் போறீங்க? எங்களைக் கூப்பிடாமல் இதை வழங்ககூடாது! எங்க கட்சி உறுப்பினர்களோட கார்டுகளுக்கு  மொதல்ல வழங்கிடுங்க!...ன்னு துவங்கி பல உத்தரவுகளை போடுறாங்க. அதாவது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை தேர்தலுக்கான இலவச பொருட்கள் மாதிரி மாற்றிட நினைக்கிறாங்க. அதை வழங்குறப்ப கடைகளுக்கு வாழை மரம் கட்டி, பேனர் கட்டி, எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா பட பாடல்களைப் போட்டு பக்காவா பிரசாரம் பண்ணும் முடிவில் இருக்கிறாங்க. 

ஆனால், இந்த பணம் மற்றும் பரிசு தொகுப்பெல்லாம் எப்போ எங்கள் கைக்கு வந்து சேரப்போகுது? அதை எப்போ எங்க அதிகாரிங்க கொடுக்க சொல்லப்போறாங்கன்னே தெரியலை. ஆனால் அதுக்குள்ளே ஆளுங்கட்சி டீம் ஓவரா டார்ச்சர் பண்றாங்க.” என்று புலம்பிக் கொட்டுகின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகளை ஆளுங்கட்சியினர் முற்றுகையிடும் விவகாரம் தி.மு.க.வினருக்குப் போக, அவர்களோ சோஷியல் மீடியாவில் தி.மு.க.வின் இணையதள பக்கங்களில் “இத்தனை நாளாக ஆளுங்கட்சியினருக்கு ரேஷன் கடைகள் மேலே இல்லாத அக்கறை இப்போ மட்டும் என்னவாம்? அரிசி இல்லை, மண்ணெண்ணெய் கிடைக்கல, சர்க்கரை போடவே மாட்டேங்கிறாங்க!ன்னு இத்தனை  வருஷமா மக்கள் புலம்புனப்பவெல்லாம் அந்தப் பக்கம் எட்டி கூட பார்த்ததில்லை ஆளுங்கட்சி ஆளுங்க. 

ஆனா இப்ப அரசு பணத்தை எடுத்து கொடுத்துட்டு, அதை பிரசார கருவியா பயன்படுத்த நினைக்கிறது அசிங்கம். இத்தனை நாளா காணாமல் போன நீங்க, இப்ப மட்டும் ஏன் ஆர்வம் காட்டுறீங்க? ரோஷமிருந்தால் ரேஷன் கடை பக்கம் வராதீங்க!” என்று போட்டுப் பொளந்திருக்கின்றனர். 
அது சரிதான்!