தமிழகத்தில், மக்களவைத்  தேர்தல் மட்டுமின்றி, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், அ.தி.மு.க., உள்ளது.

அதே நேரத்தில் அ.தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், இத்தேர்தலில், வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில், தி.மு.க.,வும் உள்ளது. அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என, தினகரனின், அ.ம.மு.க.,வும் விரும்புகிறது.

எனவே, மூன்று கட்சிகளுக்கும், தங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக, இது பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., தரப்பில், பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பல தொகுதிகளில், கோடீஸ்வர வேட்பாளர்களும், வாரிசுகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக, அமைச்சர்களும், தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நெருக்கத்தில், வாக்காளர்களை கவர்வதற்கு பல ஏற்பாடுகளை, இவர்கள் செய்து வருகின்றனர். அதற்கு முன்பாக, கட்சியின் பூத் ஏஜென்ட்கள், நிர்வாகிகளை கவர, பரிசு திட்டங்களை, கோடீஸ்வர வேட்பாளர்கள், வெளிப்படையாக அறிவிக்க துவங்கி உள்ளனர்.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், 'மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள, ஆறு சட்ட சபை தொகுதிகளில், எங்கு அதிக ஓட்டுகள் கிடைக்கிறதோ, அந்த தொகுதி பொறுப்பாளர்களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அறிவித்து உள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியின், வேலுார் தொகுதி வேட்பாளர், ஏ.சி.சண்முகம், தனக்கு அதிக ஓட்டுகளை பெற்று தரும் கூட்டணி கட்சியினருக்கு, 'புல்லட் பைக்' வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 
பூத் ஏஜென்ட்களை, தனி ரயிலில், இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாகவும், முக்கிய நிர்வாகிகளை, வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேபோல, வேலுார் தொகுதி, தி.மு.க., வேட்பாளரின் தந்தையும்,அக்கட்சி பொருளாளருமான துரைமுருகன், கட்சியினருக்கு, 50 லட்சம் ரூபாய் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளார். துாத்துக்குடியில், கனிமொழிக்கு அதிக ஓட்டு வாங்கித் தருவோருக்கு, தங்க சங்கிலி,மோதிரம் வழங்கப்படும் என, அம்மாவட்ட செயலர், அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., - தி.மு.க., மட்டுமின்றி, காங்., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், பூத் ஏஜென்ட்கள், நிர்வாகிகளுக்கு, விமான சுற்றுலா, தங்க சங்கிலி, 1 சவரன் மோதிரம், இரு சக்கர வாகனம் என, பரிசு திட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

இந்த பரிசு திட்ட அறிவிப்புகள் எல்லாம், கட்சியின் செயல் வீரர் கூட்டங்களில், அறிவிக்கப்பட்டு உள்ளன.