இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன.  ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதனால்  தேமுதிக மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. 

அந்த தேர்தலில் தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தனது வாக்கு வங்கியை அக்கட்சி பெருமளவு இழந்தது.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாதது, பிரேமலதா கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக பேசப்படுகிறது.

இதே போல்  வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிகவால் அதிமுக கூட்டணிக்கு எந்த வாக்கும் பெரியளவு இல்லாததால் அதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
 
இதையடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடலாம் என அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதைவிட மக்கள் நீதி மய்யம் அல்லது நாம் தமிழர் கட்சியுடன் கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என அதிமுக தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் அமைச்சர்கள் தேமுதிகவை வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கழட்டி விடலாம் என்று கூறி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக ஒருவேளை தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டால் தேமுதிகவின் எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகி விடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.