குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ….வெங்கய்யா நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு…

 குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவி அளிப்பதாக அதிமுக அம்மா அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

 துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் காந்தியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் ஆவார்.

ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த 68 வயது வெங்கய்யா நாயுடு வட இந்திய சாயல் கொண்ட பாஜகவின்  தென்னிந்திய முகமாக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில்  பாஜக வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவை அதிமுக அம்மா அணி ஆதரிக்கும் என முடிவெடுக்கப்பட்டது.