கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், மீண்டும் பழையப்படி தங்கள் பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.  சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகத் தொடங்கிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமைத்த கூட்டணி அப்படியே உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் நிலவரம் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருப்பதாகக் கூறிகொண்டாலும் கூட்டணிக்குள் கல்லெறியத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே அவ்வப்போது வார்த்தைப் போர் வெடிப்பதும், சமூக ஊடகங்களில் மோதிக்கொள்ளும் போக்கும் அதிகரித்துவருகிறது. உச்சகட்டமாக பாஜக தனித்துப் போட்டியிட்டாலே 60 தொகுதிகளில் வெல்ல முடியும் என்று பாஜக தலைவரே பேசத் தொடங்கியிருக்கிறார். 
இன்னொரு புறம் தேமுதிக தங்கள் பங்குக்கு அதிமுக கூட்டணியை உரசிவருகிறது. தொண்டர்களும் நிர்வாகிகளும் தனித்து போட்டியிட விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் அன்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக கூட்டணி குறித்து ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா. லேட்டஸ்ட்டாக நேற்று கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில் விஜயகாந்தால்தான் அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் தர முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு புறம் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்றும் கூறுகிறார். ஜனவரியில்தான் கூட்டணியா, தனித்து போட்டியா என்று சொல்வோம் என்று பேசிவருகிறார் பிரேமலதா.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தற்போது வரை அமைதியாகவே உள்ளது. ஆனாலும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்றும் பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியும் நம் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை. அதற்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றும் பாமக சிறப்பு செயற்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேசினார். எனவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் போல தனித்து போட்டியிட விரும்புகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. 
திமுகவில் இருக்கும் கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறார்கள்.  கூட்டணியில் உள்ள கட்சிகள் அவ்வப்போது கூடி பொதுபிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றன. ஆனால், அதிமுக கூட்டணியில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறுவதும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து முதல்வரிடம் கருத்து கேட்டால், அது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறார். எனவே,  தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணி என்பது, இருக்கு, ஆனா இல்லை என்ற ரகம்தான். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அதிமுக கூட்டணி ஜனவரிக்கு பிறகுதான் இறுதி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.