ADMK 5 Member team submitted memorandum to EC

நேற்று இரட்டை இலைச் சின்னம் மீட்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதை அடுத்து, இன்று தில்லிக்குச் சென்ற அதிமுக., வின் ஐவர் குழு, தேர்தல் ஆணையத்தில், அதிமுக., ஓபிஎஸ்., ஈபிஎஸ் இணைந்த பின் கூடிய பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலைக் கொடுத்தது. 

இதன் பின்னர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக., வின் கே.பி. முனுசாமி, “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியல் சூழ்நிலை காரணமாக அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. அதிமுக.,வின் புகழைக் காக்கவும், ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்தும் இரு அணி தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுத்து, இணைப்புக் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தோம். இணைப்புக்குப் பின் பொதுக்குழு கூட்டப்பட்டு அப்போது சில தீர்மானங்களை எடுத்தோம்.

ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என்று தான் குறிப்பிடுவோம். அதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் என்ற பதவி ஜெயலலிதவுக்கு மட்டுமே கொடுப்போம் என்று பொதுக்குழுவில் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் பொதுச்செயலாளர் என்ற பதவியையே நீக்கி தீர்மானம் இயற்றினோம்.

புதிதாக இயக்கத்துக்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பொறுப்புகளை உருவாக்கி பொதுக்குழுவில் அங்கீகாரம் கொடுத்தோம். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் உள்ள முதன்மை அதிகாரியிடம் இதனைக் கொடுத்தோம்.

ஒரு கோரிக்கையும் தேர்தல் ஆணையத்தில் வைக்கவில்லை. இரு அணிகளும் இணைந்ததை சொல்லியிருக்கிறோம். அதிகாரம் கொண்ட அமைப்பை புதிதாக உருவாக்கியதை பொதுக் குழுவில் அங்கீகாரம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம் அவ்வளவுதான் என்று கூறினார் கே.பி. முனுசாமி.

மேலும் ஜெயலலிதா சென்ற வருடம் இந்த நாளில்தான் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த நாளை துயரமான நாளாகக் கருதுகிறோம் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்தார் கே.பி.முனுசாமி. அவருடன் மைத்ரேயன் எம்.பி.யும் உடன் இருந்தார்.