Actress Sukanya complains about Naam Tamilar Party Administrator
நடிகை சுகன்யாவின் வீட்டை வாடகைக்கு எடுத்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளார். வீட்டை வாடகை கொடுத்த விஷயத்தில் தற்போது சுகன்யா மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சின்னக் கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றி, திருமதி பழனிச்சாமி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுகன்யா. சென்னை, பெசன்ட் நகரில் இவருக்கு வீடு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவர் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை நாம் தமிழர் கட்சி அலுவலகமாக அந்த நிர்வாகி மாற்றியுள்ளார். இதனை அடுத்து அந்த வீட்டில், கட்சி கொடி மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன.

வீட்டில், கட்சி கொடி வைக்கப்பட்டதற்கு நடிகை சுகன்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை காலி செய்து விடுமாறும் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த வழக்கறிஞரோ, வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். மேலும் வாடகை தொகை கொடுப்பதையும் நிறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை சுகன்யா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதை அடுத்து, நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து சுகன்யாவிடம் சமாதானம் பேசப்பட்டதாம். அதில் திருப்தி ஏற்படாத நிலையில் நடிகை சுகன்யா கடும் மன வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
