தமிழ் திரையுலகத்தால் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீவித்யா. இவர் கடைசி காலத்தில் தனது சொத்துக்களை ஏழை மாணவர்களுக்கு எழுதி வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் குறித்து அவரது அண்ணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Actress Srividya Sad Life Story
தனது இயல்பான நடிப்பாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். திரைத்துறையால் கிடைத்த புகழ், பணம், ரசிகர்களின் பேரன்பு ஆகியவை இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும், சோகங்களையும் சந்தித்து இருக்கிறார் ஸ்ரீவித்யா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த போது தனது கோடிக்கணக்கான சொத்துக்களை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட நடிகை ஸ்ரீவித்யா குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
14 வயதில் நடிக்க வந்த ஸ்ரீவித்யா
1953 ஆம் ஆண்டு சென்னையில் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எல் வசந்தகுமாரிக்கும், நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்திக்கும் மகளாகப் பிறந்தவர் ஸ்ரீவித்யா. கலைக் குடும்பம் என்பதால் இயல்பாகவே அவருக்கு இசை மற்றும் நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக தனது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். ஸ்ரீவித்யா பிறந்து ஒரு வருடத்தில் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் குடும்ப பொறுப்பை எம்.எல் வசந்தகுமாரி பார்த்துக் கொள்ள நேர்ந்தது .குடும்ப சூழல் ஸ்ரீவித்யாவை திரைத்துறைக்கு அழைத்து வந்தது. தனது 14வது வயதில் 1966 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான ‘திருவருட்செல்வர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை துவங்கினார். 1969 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்கம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர்
திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, சிவக்குமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல் ஆகியோருடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘அபூர்வராகங்கள்’, ‘நான் அவன் இல்லை’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘பட்டியல் புதுமை’, ‘காக்கும் கரங்கள்’ ஆகியவை இவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன. 1971 ஆம் ஆண்டு வெளியான ‘நூற்றுக்கு நூறு’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ‘அபூர்வராகங்கள்’ படத்தில் கமலஹாசன், ரஜினியுடன் நடித்த இவரது கதாபாத்திரம் பெரும் பாராட்டை பெற்றது. பின்னர் ரஜினிகாந்துடன் ‘முரட்டுக்காளை’, ‘முள்ளும் மலரும்’, ‘தளபதி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிப்பின் இலக்கணமாக மாறிய ஸ்ரீவித்யா
மலையாளத்தில் சத்யன், மம்முட்டி, மோகன்லால், நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் இணைந்து நடித்தார். 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், மலையாள திரையுலகில் அம்மா கதாபாத்திரங்களுக்கான இலக்கணமாக திகழ்ந்தார். ஸ்ரீவித்யாவின் தனிப்பட்ட சிறப்பே அவரை எந்த விதமான வேடத்திலும் பொருத்த முடியும். எந்த கதாபாத்திரமானாலும் அதில் பொருந்தி போகும் அளவுக்கு திறமை பெற்று விளங்கினார். கதாநாயகி, குணச்சித்திர நடிகை, தாய், சகோதரி என எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதை இயல்பாகவும், உணர்வுப் பூர்வமாகவும் வெளிப்படுத்தினார். அவரது குரல் வளம், வசன உச்சரிப்பு, முக பாவனைகள், நடனத்திறமை அவரது நடிப்பிற்கு மேலும் வலு சேர்த்தன.
கமல்-ஸ்ரீவித்யா காதலை முறிவு
அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு நடிகர் கமலஹாசனுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் கடைசிவரை கைகூடவில்லை. கமலஹாசன் ஸ்ரீவித்யா இருவருமே நடிகர்களாக வளர்ந்து வரும் நிலையில் திருமணம் செய்து கொண்டால் அது திரை வாழ்க்கையை பாதிக்கும் என எண்ணிய ஸ்ரீவித்யாவின் அம்மா சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இதற்கு கமலஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீ வித்யா மீதான காதலை கமல் முறித்துக் கொண்டார். ஸ்ரீவித்யாவை பிரிந்த கமல் ஒரு வருடத்தில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். காதல் தோல்வியால் துவண்ட ஸ்ரீவித்யா சில வருடங்களுக்கு பின்னர் மலையாள திரைப்பட உதவி இயக்குனர் ஜார்ஜ் தாமஸை மணந்தார்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு
ஆனால் ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலை தூக்கின. ஜார்ஜ்க்காக ஸ்ரீவித்யா கிறிஸ்துவராக மாறினார். அவருடைய குடும்ப வழக்கங்களை பின்பற்றினார். ஸ்ரீவித்யாவிற்கு திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் விருப்பமில்லை. ஆனால் ஜார்ஜ் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது போல உணர்ந்தார் ஸ்ரீவித்யா. குழந்தை பெற்றுக் கொண்டால் அவரால் நடிக்க முடியாது என்பதற்காக மூன்று முறை கட்டாயப்படுத்தி ஜார்ஜ் கருக்கலைப்பு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜார்ஜ் தன்னை பணம் சம்பாதிக்கும் மிஷினாக எண்ணுவதை அறிந்து கொண்ட ஸ்ரீவித்யா, அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். பண நெருக்கடிகள், கணவரின் தவறான பழக்கவழக்கங்கள், துன்புறுத்தல்கள் என பல பிரச்சனைகளை சந்தித்த ஸ்ரீவித்யா 1980 ஆம் ஆண்டு கணவர் ஜார்ஜிடமிருந்தும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த தகவல்களை ஸ்ரீவித்யாவின் அண்ணி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
முதுகெலும்பு புற்றுநோயால் உயிரிழந்த ஸ்ரீவித்யா
திருமணம் முறிவுக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், கடைசி வரை மறுமணம் செய்து கொள்ளவில்லை. 2003 ஆம் ஆண்டு ஸ்ரீ வித்யாவுக்கு முதுகெலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில், உடல் நலம் வெகுவாக குன்றியது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு தனது 53 வது வயதில் இந்த உலகை விட்டு மறைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துக்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவரது உயில் குறித்து சட்டப் போராட்டங்களும் நடைபெற்றன. இதுகுறித்து ஸ்ரீவித்யாவின் அண்ணி கூறுகையில், ஸ்ரீவித்யா மறைவுக்குப் பின்னர் அவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்காக கொடுத்ததாக கூறியுள்ளார்.
ஸ்ரீவித்யா செய்த நற்செயல்
மேலும், “நலிந்த சினிமா கலைஞர்களுக்கு நிதி உதவி கொடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய வீட்டில் பல காலமாக பணியாற்றியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்ததாக ஸ்ரீவித்யாவின் அண்ணி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
