கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், கடந்த 5ம் தேதி ஓ.பி.எஸ். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சசிகலாவை அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்ததாக அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 7ம் தேதி இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற ஒ.பன்னீர்செல்வம், சுமார் 40 மணிநேரம் தியானம் செய்தார். பின்னர், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சரமாரி புகார் செய்தார்.
இதனால் அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். என இருதரப்பு உருவாகியுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை லதா,அதிமுக ஆட்சியை கோட்டை விட்டால், அதிரடி நடவடிக்கை எடுப்பேன் என தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார். நடிகை லதா வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தற்போது, அதிமுவில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் உள்ளது. இந்த சம்பவங்கள் எனது மனதுக்கு வேதனையை தருகிறது. எம்ஜிஆர் உருவாக்கியஇந்த கட்சியையும், அவர் பட்ட கஷ்டங்களையும் நான் அவருடன் இருந்த பார்த்து இருக்கிறேன்.
தற்போது நடக்கும் சம்பவங்களால் அவரது உழைப்பு, கஷ்டங்கள், எண்ணங்கள் அனைத்து வீணாகிவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் உருவாக்கியதே, மக்களுக்காகத்தான். அதை முன்னிறுத்தாமல் செயல்பட்டதால், இதுபோன்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுக பொது செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சி நல்ல முறையில் நடந்து வந்தது. ஜெயலலிதா இருந்தபோது, எப்படி ஆட்சி நடந்ததோ அதேபோல் ஓ.பி.எஸ். செயல்பட்டார்.
நல்லமுறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் அவரை, ஏன் ராஜினாமா செய்ய வைத்து, முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா ஏன் அவசரப்பட வேண்டும். அதற்கு என்ன காரணமும், அவசியமும் என்ன.
இதுபோன்று அவசர கதியில் எடுத்த முடிவால், தற்போது அதிமுக என்ற கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களின் பெரிய ஆதரவுடன் 2வது முறையாக்க அதிமுக ஆட்சியை பிடித்தது. இதனை ஆச்சர்யத்த்துடன் பார்த்தனர்.
ஆனால், இன்று பதவிக்காக கட்சியையே உடைக்கும் நிலையில் நிர்வாகிகள் நடந்து கொள்வதையும், ஒற்றுமையின்மையையும் பார்க்கின்றனர். தமிழகம், இந்தியாவை தாண்டி உலகமே அதிமுகவை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்களோ என எண்ண தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கு வந்த நிலையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மூத்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன்.
இந்த கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு லதா அறிக்கையில் கூறியுள்ளார்.
