அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, தற்போதைய எடப்பாடி ஆட்சியிலும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
 நாங்குநேரி செல்வதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.


“தமிழகத்தில் தற்போது சட்டம்- ஒழுங்கு மிகவும் கேள்விக்குள்ளாகி உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் கொண்டு வரவில்லை. வரி வசூல் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்றும்  தெரியவில்லை. அதற்கு மாறாக மாறாக தமிழகத்தில் கடன் சுமைதான் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


 தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, தற்போதைய எடப்பாடி ஆட்சியிலும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கவில்லை.
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிகார பலம், பணப்பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற அதிமுக நினைக்கிறது. ஆனால், அது இங்கே நடக்காது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அதிமுகவின் பணப்பலம் இங்கே வெற்றி பெறாது” என்று குஷ்பு தெரிவித்தார்.