அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த நடிகர் செந்தில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கட்சியில் பல்வேறு புதிய பொறுப்புகளை டிடிவி.தினகரன் அறிவித்து வருகிறார். இதேபோல், மாவட்டங்களில் கட்சி பணிகளை எளிதாக மேற்கொள்வதற்காக தனித்தனியாக பிரித்தும் அதற்கென புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். மேலும், தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கவும் டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை திடீரென நீக்கி டிடிவி.தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாட்களாக கட்சி ரீதியான நடவடிக்கைகளில் அவர் ஈடுபாடாமல் ஒதுங்கியிருந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.