நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கினால், அதன் சாதக, பாதங்கள் என்ன என்பது குறித்து ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற கருத்தும் பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தனது உடல் நிலை மற்றும் டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள தகவல் உண்மைதான் என்றார். அதேசமயம், அரசியல் கட்சி குறித்து, தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார். 

ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது, பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாகவும், கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்கினால், அதன் சாதக, பாதங்கள் என்ன என்பதும், குறித்து ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்சி தொடங்கினால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.