நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் கட்சித் தொடங்குவார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருபவர் கராத்தே தியாகராஜன். முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான அவர், காமராஜரின் 118-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கே வந்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். “வழக்கமாக காமராஜர் பிறந்த நாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், கே.எஸ்.அழகிரியை காணவில்லை. அவரை விரைவில் மாற்றப்போகிறார்கள். அதனால், ஓடி ஒளிந்துகொண்டார்.” என்று தெரிவித்தார்.

 
பின்னர் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “ரஜினி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால், கொரோனா காரணமாக அது தள்ளிப்போயுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார்” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “நாவலரை அசிங்கப்படுத்தியது திமுக. ஆனால், அறிவாலயத்தில் நாவலரின் படம் திறப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று தெரிவித்தார்.
கொரோனா குறித்து கேள்விக்கு பதில் அளித்த கராத்தே தியாகராஜன், “கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால்தான் முடியும். முதலில் மு.க.ஸ்டாலின் முதலில் சரியாக இருந்துவிட்டு, பிறகு தமிழக அரசின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு கார்த்திக் சிதம்பரம் தலைவராக வருவார் என்ற தகவல்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.