நடிகர் ரஜினிகாந்த், அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம், 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை, சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகர் ரஜினி. அப்போது, அவரது ரசிகர்கள், அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினர்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில், நடிகர் ரஜினி காந்த் பேசும்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், போருக்கு தயாராகுங்கள் என்றும் அரசியலுக்கு வருவது குறித்து இலைமறைகாயாக பேசியிருந்தார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. 

ரஜினிகாந்த், தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் அடுத்த மாதத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க, நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில், ஏற்கனவே விடுபட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது, அரசியல் பிரவேசம் குறித்து தனது இறுதி முடிவை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.