2021 ஆகஸ்ட் 15 தேதியன்று  தமிழகத்தின் முதலமைச்சராக செயின் ஜார்ஜ்  கோட்டைக் கொத்தளத்தில் நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ரஜினி காந்தாக தேசிய கொடி ஏற்றுவார் என சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார், தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாகவும் அவரின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் துல்லியமாக கருத்து கூறி வரும் நிலையில் முதல் முறையாக அவர் இதை தெரிவித்துள்ளார். மேலும்,  ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் அரசியல் தலைவர் இல்லை, ரஜினி சாதாரணமாக ஒரு மருத்துவமனைக்கோ, அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கோ கலந்துகொள்ள வந்தாலும் அங்கு கூட்டம் அலைமோதுகிறது என்றார். இதே திமுக தலைவர் ஸ்டாலின் சென்றால் அவருக்கு அந்தளவிற்கு வரவேற்பு இல்லை,  ஸ்டாலினைவிட பன் மடங்கு ரஜினிகாந்த்  ஈர்ப்புள்ள உள்ள தலைவராக இருக்கிறார், திமுகவின் முன்னணி தலைவர்களே கூட நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்து செல்லும் நிலைதான் தற்போதும் உள்ளது என்று  திமுகவை மட்டம் தட்டியதுடன்,  ரஜினி அரசியலுக்கு வருவது இப்போதே திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அதிமுக திமுக என இரண்டு  கட்சிகளின் கதை, ரஜினியின் வருகைக்குப்பின் முடித்துவிடும் என்ற அவர்,   ஒரு காலத்தில் எம்ஜிஆரை பார்ப்பதற்காகவும் கருணாநிதியின் பேச்சை கேட்பதற்காகவும் கூடிய கூட்டம்  இப்போது ரஜினிக்காக மட்டுமே காத்திருக்கிறது என்றார். எம்ஜிஆர், கருணாநிதி சேர்ந்த கலவைதான் ரஜினி , அவர் ஒரிடத்தில் பேசுகிறார் என்று  தகவல் தெரிந்தால் போதும் எந்த அறிவிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கூடிவிடுவர். மற்ற கட்சிகளைப் போல் விளம்பரம் செய்து புறப்பட்டு வா என்று யாரையும் அழைக்கத் தேவையில்லை என்றார்.

அழைக்காமலேயே லட்சக் கணக்கில் கூட்டத்தை திரட்டும் சக்தி ரஜினிகாந்துக்கு மட்டுமே உள்ளது.  இதே சென்னையில் ஒரு கூட்டம் என்று அவர் அறிவித்தால் சென்னை மாநகரம் தாங்குமா??  அந்தளவிற்கு ரஜினிக்கு இணையான ஒரு தலைவர் தமிழகத்தில் யார் இருக்கிறார்கள் என்று சவால் விடுத்தார். அனைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்து களத்திற்கு ரஜினி தயாராகி விட்டார் ,  தற்போதுள்ள சூழ்நிலையில் போட்டியிட்டால் கூட குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற்று அவர் முதலமைச்சர் ஆவார். நிச்சயம் வரும்  2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ரஜினிகாந்தாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார் என கராத்தே தியாகராஜன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்