Actor Prakash blam BJP that they will plan to murder him
பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக தான் தொடர்ந்து பேசி வருவதாலும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாலும் அவர்கள் தன்னை கொலை செய்வதற்கு சதி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.ஆனால் என் உயிரை வேண்டுமானால் அவர்கள் பறிக்கலாம், என்னுடைய அறிவு மற்றும் திறமையை அவர்களால் பறிக்க முடியாது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக்குக் கொள்ள காங்கிரசும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் அங்கு நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மைசூருவில் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது , நான் பாஜக மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது என குற்றம்சாட்டினார். சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது என தெரிவித்தார்..

பிரதமர் மோடிக்கு நாட்டை ஆள தெரியவில்லை. நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி, நாட்டில் குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையை தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்களாட்சி நடத்தும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் என பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டார்..
