தமிழ் திரையுலகில் கிட்னி பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் பொன்னம்பலத்திற்கு நடிகர்கள் கமல் ரஜினி ஆகியோர் ஓடோடி வந்து உதவி செய்திருப்பது தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக்கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக் பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் திடீரென சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு மேலும் பணம் தேவை என்பதால் ரஜினியும் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் பேசும் போது.." எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து பொன்னம்பலத்துக்கு உதவ முன்வந்துள்ளதை ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள்.