தமிழகத்தில் மறு தேர்தல்தான் கரெக்ட் சாய்ஸ் நடிகர் பார்த்திபன் அதிரடி..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் மறுதேர்தல்தான் ஒரே தீர்வாக இருக்கும் என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் குற்றவாளிகள் சுட்டிக்காட்டிய முதலமைச்சர்கள் நமக்கு தேவையில்லை என ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரையிம் விளாசித் தள்ளியுள்ளார்.

ஓபிஎஸ் ,சசிகலா அணிகளிடையே நிலவி வரும் அதிகாரச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் உருவாகியுள்ள கடுமையான குழப்பம் பொது மக்களை மட்டுமல்லாமல் அக்கட்சியின் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று நடைபெறக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? அதில் அவர் ஜெயிப்பாரா? அல்லது தோல்வியுற்றால் என்ன செய்வது? வெற்றி பெற்றால் எத்தனை நாள் அது நீடிக்கும் ? தமிழகத்தில் நிலையான ஒரு ஆட்சி நடக்குமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் மறு தேர்தல் ஒன்றே மிகச் சரியாக இருக்கும் என கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் பொது மக்களின் அதிருப்தியை போக்க மறுதேர்தல் ஒன்றே தீர்வாக இருக்கும் நடிகர் பார்த்திபன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒரு கோட்டை சின்னதாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் பெரிய கோடு போட வேண்டும் என்ற யதார்த்தம் அனைவருக்கும் தெரியும்.

குற்றவாளி கை காட்டிய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவும் ஒரு குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படி என்றால் ஒரு குற்றவாளி கை காட்டியவர் எப்படி முதலமைச்சராக முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது சிறைக்கு சென்றிருக்கும் குற்றவாளி ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதலமைச்சரா? எனவும் பார்த்திபன் கேட்டுள்ளார்.

கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததைத் தான் சொல்லி வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நேரத்தில் மாணவர்களிடையே எழுந்த ஒரு புரட்சி போல் மீண்டும் இன்னொரு புரட்சி இங்கு வந்தே தீர வேண்டும் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி இவர்களில் யாரோ ஒருவர் மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு பதிலாக மறுதேர்தலை ஏன் நடத்தக் கூடாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.