நான் ஒரு டம்மி எம்.எல்.ஏ. என்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது சசிகலா மட்டுமே’ என்று தெரிவித்திருந்தார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருணாஸ் அளித்த பேட்டியில், அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்த காரணங்களை அடுக்கியுள்ளார்.


 “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தபோதே, பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்குப் பதில் சாகலாம் என்று சொன்னேன். மக்கள் அதை தேர்தல் மூலம் காட்டி விட்டார்கள். பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் அதிமுக வைத்த தவறான கூட்டணியால்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் பாஜக அமைச்சர் பதவி வழங்குவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவரை அமைச்சர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர் பதவியை வாங்கி வைத்துகொண்டு டம்மியாக இருந்தால் என்ன பயன்? நானும் கூடத்தான் இப்போது எம்எல்ஏதான். ஆனால், டம்மியாகத்தானே இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடிகிறது?” என்று காட்டமாகப் பேசினார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ். ஆனால், தினகரன் ஆதரவு நிலைப்பாடு,. எடப்பாடி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கருணாஸ் எடுத்தார். தற்போதும் அதிமுகவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் கருணாஸ், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று டம்மியாக இருக்கிறேன் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.