’எப்டி இருந்த நவரச நாயகன் கார்த்திக், இப்படி ஆயிட்டாரே’..........என்பதை தவிர வேறு என்ன வரிகள் இந்த கட்டுரைக்கு பொருத்தமாக இருந்துவிட முடியும்? கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக  தென்னிந்திய  சினிமா ரசிகைகளை, பெண்களை தன் ஹாண்ட்ஸம் முகத்தாலும், ஆஸம் குரலாலும், ஹைய்யோஸம் நடனத்தாலும் கவர்ந்து இழுத்து, கிறங்கடித்தவர். 

வயதாக, ஆக மெதுமெதுவாக சினிமாவின் ‘ஹீரோயிஸ’ நிலையிலிருந்து மாறி, குணச்சித்திர நிலைக்குள் தன்னை நுழைப்பதும், வெளியேறுவதுமாக இருந்து கொண்டிருக்கிறார். சரி அது அவரது இஷ்டம். ஆனால் இவ்வளவு அழகான மனிதர், தன்னை தென் தமிழகத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினுள் புகுத்திக் கொண்டு, கடந்த சில வருடங்களாக செய்து வரும் அரசியல் கோமாளித்தனங்கள்தான் மிகப்பெரிய கொடுமையே. நாடாளும் மக்கள் கட்சி! என்ற பெயரில் இருந்த தன் கட்சியை ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி’ என்று அவர் மாற்றினார். 

இதுவே தேர்தலுக்கு பிறகுதான் வெளியில் நாலுபேருக்கு தெரிந்தது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பிரசாரம் எனும் பெயரில் சில  கூத்துக்களை அரங்கேற்றி முடித்திருக்கிறார் கார்த்திக். அவரிடம் தேர்தல் நிலவரங்கள், தற்போதைய தமிழ அரசியல் சூழல் இதையெல்லாம் பற்றி கேட்டபோது...”மக்களுக்காகத்தானே அரசியல் கட்சியை தொடர்ந்து நடத்திட்டு இருக்கேன். அதனாலதான் மக்கள் உரிமை காக்கும் கட்சின்னு பெயரை மாத்தினேன். 

இதுல யாருக்காச்சும் அப்ஜெக்‌ஷன் இருந்தால் பேரை மறுபடியும் மாத்திக்கிறேன், நோ ப்ராப்ளம். ஆக்சுவலா நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னாடி ‘விடியல் கூட்டணி’ன்னு ஒன்றை ஆரம்பிச்சேன். ஆனால் அதுல மூணு சின்னக் கட்சியை தவிர வேற யாருமே சேரலை. வேற வழியில்லாமல் அந்த கூட்டணியை மறந்துட்டேன். தென் தமிழ்நாட்டுல ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீடுகளில் என்னோட போட்டோவை தூக்கிட்டு, தினகரனோட போட்டோவை மாட்டி வெச்சிருக்கிறதா தகவல் வந்துச்சு. அதனால இப்போ என்ன இஸ்யூ? நான் எல்லா சமுதாயத்துக்கும்தான் செல்லப்பிள்ளை (பாஸ், நீங்க பேரன் பேத்தி எடுக்குற காலம் எப்பவோ வந்தாச்சு.) அதனால ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே என்னை அடைக்காதீங்க. 

என் பையன் ‘தேவராட்டம்’ன்னு ஒரு படத்தில் நடிக்கிறதாலே அவனை அந்த சமுதாயத்தை தலையில் தூக்கி வெச்சு ஆடுறான்னு சொல்லாதீங்க. ஏன், கமல் கூட ‘தேவர் மகன்’ன்னு ஒரு படத்துல நடிச்சார். அதுக்காக அவர அந்த ஜாதிக்காரர்ன்னு சொல்ல முடியுமா.” என்று நறுக்கென்று கேட்டவர். இறுதியில்...”இந்த கார்த்திக் ரொம்ப சாதாரணமான மனுஷன். என்னை எப்போதும், யாரும் பார்க்கலாம். என்னை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்னைன்னா முன்னாடி நிற்பேன்.” என்று ஏக டயலாக் விட்டு மறைந்திருக்கிறார். சினிமா ஹீரோக்கள், அரசியலில் காமெடியன்கள் ஆக கூடாதுன்னு எந்த விதியும் இல்லையே!