Action will be taken against the Apollo administration if it fails to submit documents before January 12
ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிட்டால் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நல பாதிப்பு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சிகிச்சையின் போது யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்ற லிஸ்டை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிடில் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது.
