இது 'எடப்பாடி ஆட்சி அல்ல, டெட் பாடி ஆட்சி' என்று உதயநிதி ஸ்டாலினும் அன்றைய முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சித்ததை இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துள்ளாரா?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் மீது இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவினர் கைது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதூறாக விமர்சனம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யபட்டார். இதேபோல ஏற்கெனவே சிலரும் இதே புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். பாஜகவினர் கைது செய்யப்படுவதற்கு அக்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதல்வரை அவதூறாக விமர்சிப்பதும், சித்தரிப்பதும் குற்றம் என கூறி பாஜகவினர் பலரை திமுகவின் ஸ்டாலின் அரசு கைது செய்து வருகிறது. முதல்வரை அவதூறாகப் பேசக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை என்பதோடு கண்டிக்கத்தக்கதும் கூட.

உதயநிதி விமர்சனம்

ஆனால், பிரதமரை அவதூறாக விமர்சிப்பவர்களை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அதே போல், "நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின் என்றால்., கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி" என்று கடந்த 2021 மார்ச் மாதம் ஆ ராசாவும் இது 'எடப்பாடி ஆட்சி அல்ல, டெட் பாடி ஆட்சி' என்று உதயநிதி ஸ்டாலினும் அன்றைய முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சித்ததை இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துள்ளாரா?

நாராயணன் திருப்பதி கேள்வி

உண்மையிலேயே முதல்வரை விமர்சிப்பது தவறென்று அல்லது குற்றமென்று ஸ்டாலின் கருதுவாரேயானால் ஆ ராசா பேசியதையும், உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் தவறு, குற்றமென்று குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா? முதல்வர் மீது அவதூறு செய்வது தவறு என்று கருதும் பொறுப்புள்ளவராக , அன்றைய முதல்வர் செய்ய தவறியதை இன்றைய முதல்வர் செய்வாரா?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.