Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு... வருத்தத்தில் மு.க.ஸ்டாலின்..!

குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தொழிலாளர்களும் 35 லட்சத்திற்கும் மேலான அமைப்புசாராத் தொழிலாளர்களும், விவசாயிகளும், நெசவாளர்களும், மீனவர்களும், கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

Action taken by Edappadi Palanisamy..MK Stalin upset
Author
Tamil Nadu, First Published May 10, 2020, 3:56 PM IST

தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில் அதிகாரிகளைத் தவிர்த்து பல்வேறு துறைகளின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 ஊரடங்கின் விளைவாக ஏற்பட்டிருக்கும், மேலும் ஏற்படவிருக்கும், மாநிலப் பொருளாதாரத்தின் மீதான கடுமையான தாக்கம் குறித்து ஆராய்ந்து, அதிமுக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிட, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. இந்தக் குழுவில் 24 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தாலும், பொருளாதார நிபுணரான தலைவர் மற்றும் தொழிலதிபர்கள் தவிர எஞ்சிய அனைவருமே அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவாகவே அமைந்திருப்பது சிறப்பானதுதானா எனத் தோன்றுகிறது.

Action taken by Edappadi Palanisamy..MK Stalin upset

குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தொழிலாளர்களும் 35 லட்சத்திற்கும் மேலான அமைப்புசாராத் தொழிலாளர்களும், விவசாயிகளும், நெசவாளர்களும், மீனவர்களும், கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவை அரசியல் கட்சிகளின் சார்பில்கூட பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

மக்கள், கொரோனா பேரிடரால் பிப்ரவரி மாதத்திலிருந்தே கடந்த நான்கு மாதங்களாக இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; இன்னும் எவ்வளவு காலம் இந்தத் துன்பம் தொடரும் என்பதையும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்வதற்கில்லை. சமுதாயத்தின் நடுத்தரப் பிரிவு மற்றும் அதற்கும் கீழே உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாடுகிறார்கள். பணியாளர்கள் குறைப்பு, வேலை இழப்பு என்ற பேரச்சம் எங்கும் பெருகி வருகிறது. இதுபோன்ற சூழலில், இந்தக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்புகள் பெரும்பாலும் வரி வருவாயைப் பெருக்குவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

Action taken by Edappadi Palanisamy..MK Stalin upset

பொதுவாக இதுபோன்ற பேரிடர் காலத்தில், மீட்பு - நிவாரணம் - மறுவாழ்வு என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்கே மீட்பும் முழுமை அடையவில்லை; நிவாரணமும் ஓரளவுக்கேனும் நிறைவாகச் சென்றடையவில்லை. பேரிடர் நிலவும் ஒவ்வொரு நாளும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற அடிப்படையைத் தவிர்த்துவிட்டு மூன்று மாதங்களில் அறிக்கை கொடுத்தால் போதும் என்று உயர்நிலைக் குழுவுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வீடு தீப்பற்றி எரியும்போது, முதலில் தீயை அணைத்து, சிக்கிக் கொண்ட உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்; தீப்புண்களை ஆற்ற வேண்டும்; பிறகு தீயிலிருந்து தப்பியவற்றை மதிப்பீடு செய்து மறுசீரமைப்பு, மறுவாழ்வுக்கான பணிகள் வேகமாக நடைபெற வேண்டும்.

ஆனால், மாநில அரசு பின்பற்றிவரும் அணுகுமுறையில், பேரிடரின் எந்தக் கட்டத்தைக் கையாளுகிறார்கள் என்பதில் ஒளிவுமறைவற்ற தகவல் பரிமாற்றமோ, வெளி வட்டங்களிலிருந்து வரும் ஆலோசனைகளை வரவேற்கும் விருப்பமோ இருப்பதாக இதுவரை தெரியவில்லை. எனவே, இந்த உயர்நிலைக் குழுவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாநிலத்தின் மூன்று பெரும் தொழில்களான வேளாண்மை, நெசவுத் தொழில், மீன்பிடித் தொழில் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளையும், சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் உறுப்பினர்களையும் நியமித்திட வேண்டும் என்றும், மூன்று மாதங்கள் வரை காத்திராமல், ஒரு மாதத்திற்குள் இடைக்கால அறிக்கையினைப் பெற்று, அனைத்து மட்டத்திலும் உரிய ஆலோசனை நடத்தி, மக்களை மேலும் பாதிக்காத வகையில், பொருளாதார மறுகட்டமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Action taken by Edappadi Palanisamy..MK Stalin upset

ஏற்கெனவே சட்டப்பேரவையில் படிக்கப்பட்ட 2020- 2021-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கொரோனா பேரிடர் சூழ்ந்துவிட்டதால், அதன் பொருளும், பொருத்தப்பாடும், பெரிதும் மாறிவிட்டதாகவே கருதுகிறேன். ஏற்பட்டு வரும் மாற்றங்களை மனதில் கொண்டு, புதிய திட்டமிடுதலின் தேவையை அரசு எண்ணிப் பார்த்திட வேண்டும். மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மீட்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திரும்பவும் உருவாக்கி நிலைநிறுத்தவும், போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்துப் படிநிலைகளிலும் ஒருங்கிணைப்பை உருவாக்கிடத் தேவையான முயற்சிகளை இப்போதிருந்தாவது தொடங்கிட வேண்டும் என்ற தலையாய கடமையையும், பொறுப்பினையும் உணர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயலாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்குப் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், திமுக ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கிடத் தயாராகவே இருக்கிறது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios