தி.மு.க.வில் உள்ள ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தில் அழகிரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் நினைவிடத்தில் கலகத்தை ஆரம்பித்த அழகிரிக்கு தி.மு.க தரப்பில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. தற்போதுள்ள நிர்வாகிகளை விடுங்கள், முன்னாள் நிர்வாகிகள் கூட நேரடியாக அழகிரிக்கு ஆதரவாக பேசவில்லை. மேலும் தி.மு.கவின் நிர்வாகிகள் யாரும் தற்போது வரை அழகிரியை சென்று சந்திக்கவில்லை. இத்தனைக்கும் அழகிரி சென்னையில் தான் முகாமிட்டுள்ளார்.

தி.மு.கவில் உள்ள ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் தொலைபேசி வாயிலாக மட்டும் அழகிரியிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலின் தி.மு.கவில் அதிகாரத்திற்கு வந்த பிறகு பதவியை இழந்தவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், அவமானப்படுத்தப்பட்டவர்கள் அழகிரியை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் அழகிரியை முதலில் களத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களையும் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களையும் சந்திக்க அழகிரி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மாவட்டவாரியாக செல்லும் போது தி.மு.க அறக்கட்டளையில் முறைகேடு செய்யப்படுவதாகவும், பதவிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பிரச்சாரம் செய்யவும் அழகிரி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பெருமளவில் தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஸ்டாலின் இமேஜை டேமேஜ் செய்தால் போதும் என்ற மனநிலைக்கு அழகிரி வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே மிக விரைவில் சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ள அழகிரி முதற்கட்டாக தனது தந்தை கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தனது அதிரடியை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அழகிரியின் மகன் துரை தயாநிதி துவக்கவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.