பிரதமர் மோடி, கங்கை நதியை துாய்மைப்படுத்தியது போல் தேனியில் உள்ள வராக நதியை சுத்தப்படுத்துவதற்காக வராக நதியை காப்போம் என்கிற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத். 

தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத்குமார் இதுகுறித்து பேசுகையில், ‘’மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் பேரிஜம், சோத்துப்பாறை, கல்லாறு பகுதிகளில் பெய்யும் மழைநீரால் வராகநதி ஓடுகிறது. இதனால் தென்கரை, வடகரை பகுதிகள் உருவாகியது.

பெரியகுளத்தின் அடையாளமே இந்த வராக நதி தான். நதிநீர், குடி நீரை பாதுகாப்பத்திலும், தமிழக மக்களுக்கு பெற்றுத்தருவதிலும் அம்மா குறிக்கோளுடன் செயல்பட்டார். அவருடைய வழியில்  நடைபெற்று வரும் அம்மா அரசும் நீர்வளத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  மனித நாகரிகம் உருவான எகிப்தில் நைல் நதி இல்லாவிட்டால் மனித நாகரிகம் உருவான எகிப்தே பாலைவனமாகி இருக்கும். அதேபோல வராக நதி இல்லாவிட்டால் பெரியகுளத்தின் அடைபாளமான தென்கரை, வடகரை இருந்திருக்காது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப  நமது பிரதமர் மோடி கங்கை நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். புகழ்பெற்ற இந்த வராக நதியை நாமும் ஒன்றிணைந்து மீட்டெடுத்து நமது மன்னும், மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு காப்போம்.

 

உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற் போல், பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதியில் இருபுறம் கரையில் ஆண், பெண் மருதமரங்கள் இணைந்திருப்பது புனிதம். குடிநீருக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட நதி தற்போது மாசுபட்டுள்ளது. பிரதமர் மோடி, கங்கை நதியை துாய்மைப்படுத்தியது போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உதவியுடன் வராகநதியை துாய்மைப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்’’ என அழைப்பு விடுத்தார்.