தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளை ஓவர்டேக் பண்ணும் வகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்  6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 4 சீருடைகள் வழங்கப்படும் என தகவல் தெரிவித்தார். 

மேலும் 6 ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 11 லட்சம் ‘டேப்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முடிவதற்குள் அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக்கப்பட்டு, அதில் இணையதள வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றார். 500 ஆடிட்டர்கள் மூலம் 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆடிட்டர் பயிற்சி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

மேலும் ஜனவரி 3-ம் வாரத்திற்குள் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். வகுப்பறையில் கவனத்தை தவறி விட்டால் யூ-டியூப் மூலம் செல்போனில் அந்த பாடத்தை பதிவிறக்கம் செய்து அதை கற்றுக்கொள்ளும் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனாலும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் சற்று திருப்திகரமாகவே இருந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செங்கோட்டையன் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.