அதிமுகவின் கிளைக் கழக செயலாளர்களில் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
பொதுவாகவே தேர்தல் தொடர்பான விஷயங்களில் அதிமுக பாய்ச்சல் காட்டுவது எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு நீடித்துவருகிறது. இந்த நடைமுறையை இன்னமும் வேகப்படுத்தி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. புயல் வேகத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு எடப்பாடியை அடுத்த பெரிய சோரகை கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கு திரண்டிருந்த பெரும் கூட்டத்தினரிடையே பிரச்சாரத்தைத் தொடங்கினார் எடப்பாடி. சாமி தரிசனத்திற்காக செருப்புகளை கழற்றி போட்டிருந்த அவர், தரிசனத்திற்கு பின்னர் மக்களைப் பார்த்த உற்சாகத்தில் வெறும் காலுடனேயே நடக்கத் தொடங்கினார். இதைப் பார்த்தவர்கள், ‘’இந்த எளிமைதான் எடப்பாடியை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது’’என பாராட்டினார்கள்.
‘’தனது தலைமையில் அமைந்த ஆட்சி சில நாட்கள் கூட நீடிக்காது என பலரும் கணித்தார்கள். ஆனால் அத்தனை இடையூறுகளையும், சதிகளையும் தாண்டி இப்போது நான்காவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது’’என எடப்பாடி பேச, மக்கள் கூட்டம் பலத்த கைத்தட்டல்களுடன் அதனை ஆமோதித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் ரூபாய் இரண்டாயிரத்து 500 வழங்கப்படும்’’என அறிவிக்க, அது காட்டுத் தீயாக மாநிலம் முழுவதும் பரவியது.
எடப்பாடியின் இந்த பிரச்சாரத்தின் தாக்கம் தமிழகம் முழுவதுமே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் கிளைக் கழக செயலாளர்களில் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். எடப்பாடி அரசின் சாதனைகளை கீழ்மட்டம் வரை கொண்டு செல்வதில் அனைத்து அணிகளும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இதுபற்றி அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறும்போது, ‘’அம்மா மறைவுக்கு பிறகு இனி கட்சியும், ஆட்சியும் அவ்வளவுதான் என எண்ணினோம். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் எண்ணங்களை முழுமையாக மாற்றிவிட்டார். அம்மாவிடமிருந்து பெற்ற அரசியல் ஞானத்தை பயன்படுத்தி எவ்வளவோ சோதனைகளுக்கு மத்தியில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிவிட்டார்.
இப்போது அடுத்தக்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தையும் அதிரடியாக தொடங்கியிருக்கிறார். அவரது பொங்கல் பரிசு திட்டம் எல்லா தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக எடப்பாடிக்கு எல்லோரும் இதயபூர்வமாக நன்றி செலுத்துகின்றனர். எடப்பாடியை பொதுமக்கள் முதல்வராகவே பார்க்கவில்லை. அவரது எளிய அணுகுமுறைகளால் தங்களில் ஒருவராகவே கருதுகின்றனர். சமீபகால தமிழக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் மக்களிடம் இந்தளவிற்கு நெருங்கியதில்லை. இதனால் வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும்’’என்றார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 21, 2020, 12:54 PM IST