acid attack victims will have reservation in central government job
ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மனரீதியாக, கற்றல் குறைபாடு உள்ளவர்கள், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்க அரசு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனைத்து மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி பிரிவுகளில் ஏற்கனவே குறிப்பிட்ட உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு 3% இருக்கும் நிலையில், இது இப்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்வை சவால் மாற்றுத்திறனாளிகள், குறைந்த பார்வைத்திறன் உள்ளவர்கள், செவித்திறன் குறைபாடுகள், கேட்கும் திறன் அற்றவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் துறை ரீதியான வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
மேலும், ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ளவர்கள், மனரீதியான குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் இந்த ஒரு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ளவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டே சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது.
முந்தைய உத்தரவின்படி, வேலைவாய்ப்புகளில் 3% என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். இப்போது கூடுதலாக 1% என்பது, பார்வை சவால், குறைந்த பார்வை திறன், செவித்திறன் உள்ளிட்ட குறைகளைக் கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளைப் பின்பற்றி, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீடு முறை செயல்பட வேண்டும். குறைதீர் பிரிவில் உள்ள அதிகாரிகள், மக்களின் குறைகளை களைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
