சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அங்கிருந்து தமிழக சிறைக்கு மாற்ற விட மாட்டோம் என அவ்வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களுரு பரப்பன அக்ராஹரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சசிகலாவை பெங்களுரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில சிறைகளில் இருந்து வெளி மாநில கைதிகள் பலர் தங்களது சொந்த மாநில சிறைகளுக்கு மாறுதல் வாங்கி சென்று உள்ளனர் என்ற அடிப்படையில் இதற்கான முயற்சியில் அதிமுக வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.

தண்டனை பெற்ற கைதிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும். என்றாலும் இரு மாநில ஒப்புதல் பெற வேண்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடப்பதால் இப்பிரச்சனையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்காது.

இந்நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகமும் ஆட்சேபம் தெரிவிக்காது என ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா தெரிவித்திருந்தார். எனவே சாதகமான சூழல் இருப்பதால் சசிகலா விரைவில் தமிழக சிறைக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிகலா மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் கர்நாடக தனி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக- கர்நாடக அரசுகள் இணைந்து இப்பிரச்சனையில் முடிவு எடுத்தாலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது என கூறிய ஆச்சார்யா, அப்படி தமிழக சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட்டால் அதை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் உடனடியாக அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் தெரிவித்தார்.