டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் பேசிய அக்கல்வி நிறுவனத்தின் நிறுவனரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ்ஸை அவரே வெட்கப்படும் அளவிற்கு புகழ்ந்து தள்ளினார்.

அந்த விழாவில் பேசிய ஏ.சி.சண்முகம், 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே நபர் ஓபிஎஸ் தான். அதுவும், சாமானிய மக்களுக்கான பட்ஜெட். ஓபிஎஸ் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்லாது மிகச்சிறந்த மனிதரும் கூட. மிகவும் நேர்மையானவர், அடக்கமானவர். அறநெறி தவறாத நல்ல மனிதர். மகாபாரதத்தில் வரும் தர்மர் தான் ஓபிஎஸ்.

அண்ணாவின் அரவணைப்பு, எம்ஜிஆரின் நல்ல மனம் மற்றும் விவேகம் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற மனிதர் ஓபிஎஸ். முதல்வரின் ஈபிஎஸ்ஸின் தலைமையில், இந்தியாவிலேயே நல்லாட்சி வழங்குவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு. அதற்கு, ஈபிஎஸ்ஸிற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்பவர் துணை முதல்வர் ஓபிஎஸ்.

பிரதமர் மோடியின் அதீத அன்பை பெற்றவர். மோடி மற்றும் அமித் ஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார்; நானே பார்த்திருக்கிறேன். மொத்தத்தில் ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டுமோ அதற்கான இலக்கணமாக வாழ்ந்துகொண்டிருப்பவர் ஓபிஎஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஏ.சி.சண்முகம்.

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியிலிருந்து, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் அறிவுறுத்தலின் படி தான் ஓபிஎஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் உள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், ஈபிஎஸ்ஸுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது கூட, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் தான் என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுடன் அடிக்கடி ஓபிஎஸ் தொலைபேசியில் பேசுவார் என்று ஏசிஎஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.