சசிகலாவுக்கு ஆதரவு தரும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று, ஒரு வாரம் தங்கியிருந்து பொது மக்களிடம் கருத்துக் கேட்டு
அதன் பின்னர் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவு செய்யட்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
சசிகலா அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு ஏதுவாக ஓபிஎஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் திடீர் திருப்பமாக ஓபிஎஸ் உயர்த்திய போர்க்கொடி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது, தன்னிடம் வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கியதாகவும், சட்டப் பேரவையில் தனக்கு மெஜாரிட்டி இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினர் ஆளுநரை தனித்தனியாக சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் தனியார் விடுதிகளில் தங்க வைத்து பராமரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,.
இந்நிலையில் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ள கோவை கவுண்டன்பாளையம் எம்எல்ஏ இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் எம்எல்ஏ க்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று பொது மக்களை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வாக்களித்த பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தான் தனது தொகுதிக்கு சென்று பொது மக்களை சந்தித்தாகவும், அவர்கள் அனைவரும் சசிகலா பின்னால் போக வேண்டாம் எனறு தெரிவித்தாக கூறினார். ஓபிஎஸ் க்கு ஆதரவாக தான் செயல்படுவதை தனது தொகுதி மக்கள் மிகவும் பாராட்டுவதாகவும் கூறினார்.
