இடைத் தேர்தல் புகழ் நாங்குனேரி தொகுதியை மையமாக வைத்து திமுக ஆடும் கதகளி ஆட்டம் அந்தக் கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரசின் வசந்தகுமார் கடந்த எம்.பி தேர்தலின்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால், காலியான நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரசின் ரூபி மனோகரனை தோற்கடித்து அதிமுகவின் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ ஆனார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் இங்கு அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அதிமுக வழிகாட்டும் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியனும் நாங்குனேரியில் போட்டியிட காய்நகர்த்தி வருகிறார். திமுக தரப்பில் இப்போதே ஒன்றிற்கும் மேற்பட்டோர் ’’நான்தான் வேட்பாளர். தலைமை சிக்னல் கொடுத்தாச்சிது’’என கூறி வருகிறார்கள்.

கடந்த 1989க்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. நடேசன் பால்ராஜ், வசந்தகுமார், எர்ணாவூர் நாராயணன், ரூபி மனோகரன் என போட்டியிட்ட பெரும்பாலானோரும் வெளியூர்வாசிகள் என்பதால் உள்ளுர் கட்சிக்காரர்கள் மத்தியில் ரொம்பவே சலிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது ஸ்டாலினிடம் இது பற்றி பலரும் எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது ஸ்டாலின், ’’இந்த முறை தொகுதி திமுகவுக்குத்தான். அதிலும் உள்ளுர் வேட்பாளருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்’’என பூடகமாகக் கூறியிருக்கிறார். இதனால் தொகுதிக்குட்பட்ட களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் தெம்பாக களமிறங்கி வேலைபார்க்க ஆரம்பித்திருக்கிறார். போட்டிக்கு கனிமொழி அணியைச் சேர்ந்த சென்னைவாசியான  ஆரோக்கிய எட்வின், ‘’தொகுதி எனக்குத்தான். மேடம் கியாரண்டி கொடுத்திருக்காங்க’’என சொல்லி வருகிறார்.

திமுகவில் இன்னொரு போட்டியாளராக வர்த்தக அணி துணைத் தலைவர் கிரகாம்பெல். ’’தலைவரோட கிச்சன் கேபினட்டை பிடித்தாகிவிட்டது. அதனால நிச்சயம் சீட் எனக்குத்தான்’’என டிக்ளர் செய்துள்ளார். கிளைமாக்சாக போன தேர்தலில் போட்டியிட்டு தோற்ற காங்கிரசின் ரூபி மனோகரனும், ‘சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். எனக்கு சீட்டை உறுதிப் பண்ணிட்டாரு’என சொல்வதோடு தொகுதி முழுக்க அள்ளியிறைக்கவும் ஆரம்பித்துவிட்டார்.  திமுக தலைமை நடத்தும் இந்த ஆடுபுலி ஆட்டம் குறித்த செய்திகள் தெரியவர, உண்மையான திமுகவினர் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். ‘’ஒரே தொகுதியை வைத்து இப்படி பலரிடம் விளையாடுவது ஆபத்தில்தான் முடியும்’’என அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.