கூவம் ஆற்றில் விழுந்த இளம் பெண் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில், 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுதபடி படியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ரயில், சைதாப்பேட்டை - கிண்டி இடையே கூவம் ஆற்றின் பாலத்தில் சென்றுகொண்டிருந்த சமயத்தில், அந்த பெண் திடீரென கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, கூவத்தில் விழுந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்ததில் ஆவடி பகுதியை சேர்ந்த சீவிகா என்பதும், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் டாக்டரின் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

சீவிகாவுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆவதாகவும், அவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்து வந்து சீவிகாவின் முன்னிலையில் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீவிகா கூவம் ஆற்றில் குதித்ததாக தெரியவந்தது. சீவிகாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், சீவிகாவின் கணவர் ரோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.