அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கும்போது ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

2ஜி விவகாரம் தொடர்பாக திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இதுதொடர்பாக முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என அறிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஜெயலலிதாவைச் சட்டத்துக்கு விரோதமாகச் சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இதுதொடர்பாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் உச்சம் பெற்றது. ஸ்டாலின், ஆ.ராசா இருவரையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அந்த வகையில் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும் ஆ.ராசாவுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ;- ஆ.ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது. விஞ்ஞான ரீதியில் ஊழல் எப்படி செய்யலாம் என நிருபித்த கட்சி திமுக. சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது விசாரணை நடத்திய அதிகாரியே ஆச்சரியப்படும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முடியும் என உலகுக்கே எடுத்துக் காட்டியது திமுகதான். இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஓர் ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், அது திமுக ஆட்சிதான்.

கண்ணுக்கே தெரியாத காற்றில் கூட ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் திமுகவின் ராசாவும், கனிமொழியும்தான். இருவர் மீதும் வழக்கை தொடுத்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான். அதைத்தான் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னார். ஆ. ராசாவும் கனிமொழியும் தியாகம் செய்தா திகார் சிறைக்கு சென்றார்கள்? 2ஜி வழக்கில் ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரும் விடுதலை செய்யப்படவில்லை. போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறிதான் நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐ செய்துள்ள மேல் முறையீடு வழக்கில் இருவரும் தப்பிக்க முடியாது. அந்தப் பயத்தில்தான் ஸ்டாலினும், ஆ.ராசாவும் பிதற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்ற அமைச்சர், “ஆ.ராசாவுக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணா நினைவிடத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எழுதப்பட்டுள்ளது. அதைப்போல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஒரு வாசகத்தை எழுதுவோம், ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார் ஆ.ராசா. இடித்தால் அவருடைய கை வெட்டப்படும். துணிச்சலாகச் சொல்கிறோம். நாங்கள் அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.