A police complaint against kamalhassan in udumalai station

ஆர்.கே.நகர் தொதகுதி வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் என்று நடிகர் கமலஹாசன் கூறி இழிவு படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடுமலை காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்

இந்த நிலையில் ஆனந்த விகடன் வார இதழில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்து இருந்தார்.

இதை தொடர்ந்து வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர் கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் என்பது போன்று கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.