மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், கன்றுக்குட்டியை கொன்றதற்காக வயதான பெண் ஒருவரை 7 நாட்கள் பிச்சை எடுக்க வைத்து, கங்கையில் மூழ்கிவர கிராமப் பஞ்சாத்தில் தீர்ப்பு கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேச மாநிலம், பிஹிந்த் மாவட்டம், வாஸ் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ் தேவி என்பவர்,  கடந்த வாரம் வௌ்ளிக்கிழமை தனது வீட்டில் வளர்த்த பசுவிடம், அதன் கன்றுக்குட்டி பால் குடித்துக்கொண்டு இருந்தது. அப்போது, கன்றுக்குட்டியை பிடித்துக் கட்டுவதற்காக அதன் கழுத்தில் இருந்த கயிற்றை பிடித்து கமலேஷ் தேவி இழுத்தபோது, எதிர்பாராத விதமாக கயிறு இறுகி கன்றுக்குட்டி இறந்தது.

இந்த விவகாரம், உள்ளூர் கிராமப்பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கடந்த சனிக்கிழமை பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அதில், கன்றுக்குட்டியை கொன்றதற்காக, கமேலேஷ் தேவி, கிராமத்துக்கு வெளியே சென்று, 7 நாட்கள் பிச்சை எடுக்க வேண்டும் என்றும், அதன்பின், கங்கை நதியில் குறித்து, குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி, இந்த உத்தரவைக் கேட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார், இதையடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராமசபை உறுப்பினர் முகேஷ் கார்க் கூறுகையில், “ கிராம பஞ்சாயத்தின் உத்தரவு மனிதநேயமற்றது, சட்டவிரோதமானது. இன்றைய நவீன காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளை ஏற்க முடியாது. போலீசார் பஞ்சாயத்து கூறிய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அணில் சிங் குஷ்வாலாவிடம் கேட்டபோது, “ இது தொடர்பாக யாரும் வந்து புகார் கொடுக்கவில்லை. ஊடகங்கள் மூலம் இந்த செய்தியை அறிந்தேன். புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மகன் அணில் நிவாஸ் கூறுகையில், “ எனது தாய் செய்த தவறுக்காக, பஞ்சாயத்து  தலைவர்கள், மதத்தில், பாரம்பரியத்தில் உள்ளதை கூறி பின்பற்றக்கூறினார்கள். இதில் தவறில்லை’’ என்றார்