நூறு சதவீதம் அதிமுகவும் பாஜகவும் இணைந்து விட்டது என்றும், அவர்கள் சொல்படிதான் இவர்கள் (எடப்பாடி, ஓபிஎஸ்) செயல்படுகிறார்கள் என்றும் டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரான, தங்க தமிழ்செல்வன், தேனி சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நூறு சதவீதம் அதிமுகவும் பாஜகவும் இணைந்து விட்டது. அவர்கள் சொல்படிதான் இவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நிலைப்பாட்டில் அதிமுக கட்சியை வளர்ப்பதற்கான நிலைப்பாட்டில் இல்லை என்பது எங்களுக்கு தெரிந்து விட்டது.

எங்களுக்கு கட்சிதான் முக்கியம். அதனால்தான், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழி நடத்த வேண்டும்.

தமிழக ஆளுநர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் குடியரசு தலைவரை சென்று சந்திப்போம். அவ்வாறு செல்லும்போது 21 எம்எல்ஏக்களுக்கு பதிலாக மொத்தம் 51 எம்எல்ஏக்கள் செல்வோம் என்றார்.

ஊழல் ஆட்சி என்று கூறிய பன்னீர்செல்வம், தர்மயுத்தத்தை முடித்துவிட்டு பதவியை பெற்றுக் கொண்டார். அவர் நல்ல மனிதராக இருந்து இருந்தால், துணை முதலமைச்சர் பதவியைப் பெற்று இருக்க் கூடாது. உங்களை நம்பி இருந்தவர்களுக்கு பதவி வழங்கி இருக்க வேண்டும்.

பல பதவிகளை வகித்தவர் ஓபிஎஸ், இந்த பதவிளை வைத்து என்ன சாதிக்கப்போகிறார், விரைவில் கட்சியையும், ஆட்சியையும் நாங்கள் கைப்பற்றுவோம்.

இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.