இன்றைய தேதிக்கு இந்திய அரசியல் டைரியை ரஜினியை  புறந்தள்ளிவிட்டு எழுதவே முடியாது. அந்தளவுக்கு மிக முக்கிய அரசியலுக்குள் வராத அரசியல்வாதியாகிவிட்டார் மனிதர். அதிலும் தமிழ்நாடு எனும் ஒரு பிராந்திய அரசியல் மட்டுமில்லாது, தேசிய அரசியலும் ரஜினியை உற்று நோக்குகிறது. கூடவே இந்த தேசத்தையே ஆளும் பா.ஜ.க.வின் முழு கவனமும் ரஜினி  மீதுதான் இருக்கிறது. முப்பது நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் இருபது நாட்கள் பா.ஜ.க.வுடன் தேன்நிலவில் இருக்கிறார் ரஜினி. ஆனால் அடுத்த பத்து நாட்களோ டைவர்ஸுக்கு இரு தரப்பும் அப்ளை பண்ணுகிறது. இந்த கூடல், ஊடல் சமாசாரங்கள் ரொட்டீனாக நடந்து வருகின்றன என்பதுதான் குழப்பத்தின் உச்சமே. 
ரஜினி பா.ஜ.க.வில் இணைய வேண்டும்! என ஓப்பனாக அழைத்தார் பொன்னார். எனக்கு காவி சாய பூச நினைக்கிறாங்க, நான் சிக்கவே மாட்டேன்! என்று எஸ்கேப்பினார் ரஜினி. மோடியும், அமித்ஷாஜியும் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் மாதிரி! என்றார் ரஜினி. சிஏஏவால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை! என்கிறார். பெரியாரை தாக்குகிறார், ராமரை போற்றுகிறார்! இப்படி ரஜினியின் அரசியலல்லாத அரசியல் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழகத்தின் அரசியல், ரஜினியின் முடிவுகளால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் எனும் நிலைமை. ஆகவேதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாகி இருக்கிறார் ரஜினி. இந்த நிலையில், பிரபரல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழொன்று ரஜினி பற்றிய சர்வே ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மற்றொரு அமைப்பு எடுத்த சர்வேவின் ரிசல்ட் லீக்கானதை பெற்று இப்படி வெளியிட்டிருக்கிறது. ஒரு லட்சம் பேரை சந்தித்து, ஒரு மாத காலம் நடத்தப்பட்ட சர்வேவாம் அது. 


அதன் ஹைலைட் அம்சங்களாவன....


*    ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘சந்தேகம்’ எனும் பதிலை தொண்ணூறு சதவீதம் பேர் டிக் செய்துள்ளனராம். 
*    ரஜினி அரசியலுக்கு வந்தால் ‘ஆதரிப்போம்’ என்று தொண்ணூறு சதவீத சிறுபான்மையினர் சொல்லியுள்ளனராம். 
*    ரஜினி அரசியலுக்கு வந்தால் ‘வாக்களிப்போம்’ என இருபது சதவீதமும், ‘மாட்டோம்’ என இருபது சதவீதத்தினரும் டிக் செய்ய, மீது அறுபது சதவீதத்தினரோ ‘தேர்தல் சமயத்தில் முடிவெடுப்போம்’ என்றனராம். 
*    இன்றைய தேதிக்கு தமிழகத்தில் பதினான்கு மாவட்டங்கள் ரஜினிக்கு சாதமான பிரதேசங்களாக உள்ளதாம். அ.தி.மு.க.வின் பிரதான வாக்கு வங்கிகளான முக்குலத்தோர், கொங்கு வேளாள கவுண்டர்கள் ஆகியோரும் ரஜினியை விரும்புகின்றனராம். இதுதான் அ.தி.மு.க.வுக்கான கிரேட் ஷாக். 
*    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் ரஜினிக்கு பெரிய செல்வாக்கு இல்லையாம். 
*    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரஜினிக்கு பதின்மூன்று சதவீத வாக்குகள் ஆதரவாக உள்ளதாம். 
ஆஹாங்!