நான் அரசியலில் இருந்து ஒதுங்கி மட்டுமே இருக்கிறேன். தேர்தல் முடியட்டும் ஒரு நல்ல செய்தி வரும். தேர்தல் பணிகளில் சிறப்பாக ஈடுபடுங்கள்
கர்நாடக பெங்களூருவில் 4 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆனார். அதன்பின்னர் சென்னையில் தங்கி இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபடுவதாக கூறியிருந்த சசிகலா, திடீரென அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், ஒரு வார பயணமாக தஞ்சைக்குச் சென்ற சசிகலா, உறவினர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு கோயில் தரிசனம் மேற்கொண்டார். ஶ்ரீரங்கம் கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். பின்னர், குலதெய்வ கோயிலில் கண்ணீருடன் பிரார்த்தனை மேற்கொண்டார். இதனிடையே, சசிகலாவின் கணவர் நடராஜனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, விளார் கிராமத்தில் உள்ள நடராஜனின் நினைவிடத்துக்கு அவர் சென்றார். அங்கு கணவரின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர், சசிகலா அங்கிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த டி.டி.வி.தினகரன் நடராஜனின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, அமமுக சார்பில் வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலரும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீரங்கம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் சசிகலாவை நேரில் சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ‘தீவிர அரசியலில் நீங்கள் ஈடுபட வேண்டும். தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பீர்கள் என மிகவும் எதிர்பார்த்தோம். பலரும் இதையே எதிர்பார்த்தார்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலா, நான் அரசியலில் இருந்து ஒதுங்கி மட்டுமே இருக்கிறேன். தேர்தல் முடியட்டும் ஒரு நல்ல செய்தி வரும். தேர்தல் பணிகளில் சிறப்பாக ஈடுபடுங்கள்’ என கூறியுள்ளார். சசிகலாவின் இந்த நிலைப்பாடு அமமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடராஜனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். தேர்தல் நேரத்தில் இதை விரும்பாத சசிகலா அவர்களை தவிர்த்து விட்டு சென்னை கிளம்பி விட்டார். இந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தினகரன் வந்ததால் பொது மேடையில் அவரை சந்திக்கும் விருப்பம் இல்லாமலும் சசிகலா சென்னை சென்றுவிட்டார். பொது மேடையில் தினகரன் உடன் தன்னை பார்த்தால் அது தவறான சிக்னலாக மாறும். அமமுகவிற்கு சசிகலா ஆதரவு என்பது போல மாறும். அதை தடுக்கவே சசிகலா சென்று சென்றார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
