144 தடையை மீறியதாக ராமநாதபுரம் மாவட்ட  அதிமுக செயலளார் முனியசாமி உள்ளிட்ட 4 பேர் மீது கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நிவாரண உதவிகள் வழங்கிய அதிமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், முகக் கவசங்களை அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி ராமநாதபுரத்தின் கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி பகுதியில் மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றதாக மேலராமநதி வி.ஏ.ஓ., மணிவண்ணன் புகாரில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா, கமுதி ஒன்றிய செயலாளர்எஸ்.பி.காளிமுத்து, ராமசாமிபட்டி கூட்டுறவு சங்க தலைவர் சேதுபதி ஆகிய 4 பேர் மீது கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.