வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பணம் மூட்டை மூட்டையாகச் சிக்கியது. இதனால், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு வேலூரில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
தேர்தலை மே 19-ம் தேதிக்குள் நடத்த அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி. சண்முகம் போராடிப் பார்த்தார். ஆனால், தேர்தல் உடனடியாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பண வினியோகத்தைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகமும் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதால், அவர் அதிமுக வேட்பாளராகவே கருதப்படுவார்.


இதற்கிடையே தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே ஏ.சி. சண்முகம் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். முதல் கட்டமாக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளார். முதல் ஆளாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து ஏ.சி. சண்முகம் நேற்று வாழ்த்து பெற்றார். தொடர்ச்சியாக அதிமுக, பாமக, பாஜக தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற ஏ.சி. சண்முகம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே முதல் ஆளாக ஜெட் வேகத்தில் பணிகளை தொடங்கிவிட்டார் ஏ.சி. சண்முகம்.