DMK : திமுக கொடி கம்பம் சாய்ந்து.. மாணவிக்கு காயம்..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திமுக கொடி கம்பி சரிந்து விழுந்ததில் 10 வயது பள்ளி மாணவி காயமடைந்து இருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அரசு நிகழ்ச்சிக்காக சேலம் வருகிறார். இதை முன்னிட்டு சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள திமுகவினரை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என் நேரு திமுக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதனிடையே சேலம் மாநகரம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு அமைச்சர் கே.என் நேரு வருகை தர இருந்தார். இதனால் அமைச்சரை வரவேற்க திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - விஜயா தம்பதியினர். தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொழுது, திமுகவினரால் நடப்பட்டு வந்த கொடிக்கம்பம் மோதி மாணவி ப்ரியதர்ஷினியின் மூக்கு தண்டு உடைந்து, ரத்தம் வழிந்தது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மாணவிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு வருகிற அமைச்சரை வரவேற்க நடப்பட்டு வந்த திமுக கொடிக்கம்பம் மோதி பள்ளி மாணவி காயம் அடைந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.