80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், விடுதலைப் போராட்டம், ஏழை-எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும், சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர்.

விடுதலைப் போராட்டத்திலிருந்து 80 ஆண்டுகால பொது வாழ்க்கை காணும் நல்லகண்ணுவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நலகண்ணு இன்று தனது 97 வயது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஶ்ரீவைகுண்டத்தில் 1924-ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு. 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் 13 ஆண்டுகள், விவசாயிகள் சங்கத்தில் 25 ஆண்டுகள் இருந்துள்ளார். இன்றளவும் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். தமக்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த ரூ1 கோடி நிதியையும் அப்படியே கட்சிக்கே கொடுத்தார். அரசு வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வந்த போது முதுமையிலும் அதை ஏற்றுக் கொண்டவர். 

இன்றைய இளம் தலைமுறைக்கு தலைவர் நல்லகண்ணு முன்னோடியாக திகழ்கிறார். அனைத்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களால் பெரிதும் போற்றப்படுகிற நல்லகண்ணுவின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், 97வது பிறந்தநாள் காணும் நல்லகண்ணுவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், விடுதலைப் போராட்டம், ஏழை-எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும், சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். 

சிறந்த உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டு காலம் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.