8 way road oppesed by ladies
சென்னை – சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழிச்சாலைக்கு அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை வழி மறித்த சேலம் மின்னாம்பள்ளி கிராம பெண்கள், 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என மோடி பேசுகிறார், இப்படி எங்களிடம் இருக்கும் நிலத்தை பறித்து கொண்டால் அது எப்படி சாத்தியமாகும் என கேள்வி கேட்க அதிகாரிகள் வாயடைத்துப் போயினர்.
மத்திய அரசின் 4வது ஆண்டு சாதனையை ஒட்டி பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பயனாளிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று முன்தினம், விவசாயிகள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விவசாயிகள் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்நிலையில் சென்னை-சேலம் இடையே அமைக்கப்படவுள்ள 8 வழிச்சாலைக்காக சேலம், தருமபுரி,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டம் சின்னகவுண்டாபுரம் பகுதியில் இன்று காலை அதிகாரிகள் 200 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்ய சென்றனர். அப்போது கிராம மக்கள் அவர்களை நிலத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதே போன்று சேலத்தை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தில் அதிகாரிகள் அளவீடு பணிக்காக சென்றனர். அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் அவர்களை இடைமறித்து உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர். பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் இத்திட்டத்தை தொடங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்,
அப்போது அதிகாரிகளிடம் பேசிய ஒரு பெண், 2020 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என மோடி பேசி வருகிறார். தற்போது எங்களிடம் இருக்கும் விவசாய நிலத்தை பறித்துக் கொண்டால் நாங்கள் எப்படி விவசாயம் செய்வோம் ? எப்படி எங்கள் வருமானம் இரட்டிப்பாகும் என ஆதாரத்துடன் பேசினார்.

இதனால் வாயடைத்துப் போன அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து பேசிய அந்த பெண், இந்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தமிழக மக்களுக்கு இன்னல் விளைவித்து வருவதாக குற்றம் சாட்டினார். ஒரு படிக்காத கிராமத்துப் பெண், மோடியில் பேச்சை மேற்கோள் காட்டி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
