சென்னை - சேலம் 8 வழி சாலைத்  திட்டத்தின் நோக்கத்தையும், பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும், எனவும், இதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சேலம் – சென்னை இடையே அமைக்கப்பட்டுள்ள  8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சேலத்தில்ர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் அக்கட்சியினர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை, தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் பரிசீலித்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி சுசீந்திரகுமார்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞரிடம் நீதிபதி கருத்து கேட்டார். பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சில வழக்கறிஞர்கள், திட்டம் குறித்து மக்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் ஆட்சேபனை உள்ளது எனவும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்ட சாலையாக அமைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.

அவர்களின் கருத்தை கேட்ட நீதிபதி டி.ராஜா, தமிழகத்தில் முதன்முறையாக சென்னை - சேலம் 8 வழி சாலை அமைக்கும் திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது, அதன் நோக்கம் மற்றும் பயன்களை அறியாமல் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், இரு பெருநகரங்களுக்கிடையே இடையே சாலை அமைவதால், இடைப்பட்ட நகரங்கள், கிராமங்களை பயன்பெறும் எனவும், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்சாலைகள் அமையவும் இந்த திட்டம் வாய்ப்பளிக்கும் என்றும் விளக்கமளித்தார்.

இதன்மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சரக்குகள் குறித்த நேரத்தில் சென்றடையும் வாய்ப்பும் உள்ளதாக நீதிபதி ராஜா தெரிவித்தார். தொடர்ந்து வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

சமுக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், எதிர்கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்டோர் 8 வழிச்சாலையை கடுமையான எதிர்த்து வரும் நிலையில், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு ஆதரவாக கருத்து தெரித்துள்ளார்.